Pages

Saturday, July 21, 2012

பில்லா -2 ( பீலா - 2 ) -விமர்சனம்

எச்சரிக்கை 1 : அஜித் ரசிகர்கள்  இந்த பதிப்பை படிக்க வேண்டாம் என கேட்டு கொள்ள படுகிறார்கள் .
எச்சரிக்கை 2 : ஒரு பென்சிலும் ,நோட்டு புத்தகமும் படம் பார்க்கும்  போது  எடுத்து செல்லவும் . நிறைய தத்துவம்  சொல்லுறாங்க ... !
நன்றி : http://www.ajithfanclub.com

கடந்த வாரத்துல ரெண்டு ( பில்லா -2 , நான் ஈ )  பார்க்கும் வாய்ப்பு . ஒண்ணு ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணி சப்புன்னு போன பில்லா -2 ( பேசாம பீலா -2 ன்னு பேர் வச்சு இருக்கலாம் ). படத்துல எவ்ளோ லாஜிக் ஓட்டை இருந்தாலும் "தல " இருந்தா படம் ஓடிடும்ன்னு  டைரக்டர் நினச்சுட்டார்  போல . சரியான லாஜீக் சொதப்பல் . ( நான் ஈ விமர்சனம்  அடுத்த பதிப்பில் ... )

 தமிழ் நாட்டுல எப்படியும் ஒரு ரெண்டு வாரம் ஓடிடும். அஜித்த இலங்கை அகதிகளாய் காட்டுவதினால்  ஓவர்சீ ( oversea) நாட்டிலும் கொஞ்சம் ஓடிடும் . எப்படியும் கலெக்ஷன் பாத்துரலாம் என்கிற கார்பரேட்  கணிப்பு லாஜீக் வேணா  ஒத்துக்கலாம். பாவம் ப்ரொடியூசர் ( ஆஸ்கர் ரவி சந்திரன் ) . ரஷியா எல்லாம் போயி படம் சூட் பண்ணி இருக்காங்க . மி-17 ஹெலிகாப்டர் , train ல பாம் எல்லாம் வெடிக்க வைத்து பிரமாண்டம் காட்டுறாங்கப்பா ... ! என்ன பண்ணி என்ன பிரயோஜனம் . அஜித்த திரையில்   பார்த்தாலே சந்தோஷ படும் ரசிகர்களுக்கு வேணா பில்லா -2 பிடிக்கலாம் . ஒரு நல்ல படம் பார்க்கணும்னு நெனைக்குற என்ன மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப ஏமாற்றம் தான் .

லோக்கல் தாதா கூட கூலி ஆள சேர்ந்து ஒரு இன்டர் நேஷனல் அளவுள்ள பெரிய தாதாவா ஆகிறாராம் . சும்மா பேச்சுலே தான் பில்ட் அப் பண்ணுனாங்க தவிர ஒரு ஸீன்ல கூட அத காச்சியா காட்டுல. காட்டுன்ன ஒரு சீன்னும்  காதுல பூ. கஸ்டம்ஸ் கஷ்டடில பிடிச்சு வச்சு இருக்கிற சரக்க இவிங்க லவட்டிட்டு வராங்கலம். நேவி  ஆளுங்க எல்லாம்  ஸ்டென் கன்  வச்சு சுடுறாங்க ஆனா ஒரு புல்லட் கூட படல. போதாதா குறைக்கு அஜீத் ஷாட் கன்ல   சுட்டுட்டு வரறார் . ஷாட் கன்ல ஒவ்வொரு முறையும் காக் பண்ணி தான் சுட முடியும் . காக் பண்ணுற அந்த 2 செகண்ட் கேப்புல   ஸ்டென் கன் 60 புல்லட்ட துப்பிடும். கடத்தல் சரக்க இப்படியா ஒரு பாதுகாப்பு  இல்லாம  வச்சு இருப்பாங்க ... ! நெறையா  கண்காணிப்பு இருக்குற ஒரு சரக்க புத்திசாலி தனமாய் பிளான் பண்ணி  எடுத்துட்டு வராங்கன்னு சொன்னா ஒரு திரில் இருந்து இருக்கும்.

மாமா ,மாமானு  கதா  நாயகி உயிரை  எடுத்து தொப்புளை காட்டி ரெண்டு பாட்டு பாடிட்டு உயிரை விடுகிறார். வில்லன்  நாயகியின்  கழுத்தை கத்தியால் அறுத்து கொல்லுற  சீன் மெல் கிப்சன்  நடிச்ச 'பேற்றியாட் ' படத்தோட  தமிழ் வெர்சன் . அதே  மாதிரி நாயகியை அஜீத்  நாலஞ்சு காருல வந்து புழுதிய  பறக்க விட்டு காப்பாத்தி கூட்டுட்டு போற சீன்   டி- காஃபிரியோ நடிச்ச  " Body of Lies " படதுல  இருந்து சுட்டது . டிமிதிரி, டிமிதிரி னு  ரஷியா கேங் லீடற  காட்டுறாங்க ...ஹூ ஹூம்  நம்ப முடியல . பாலிவுட்  வில்லன் மாதிரி தான்  இருக்கான் . கொஞ்சம் செம்பட்டை முடி. செம்பட்டை மீசை வச்சு காட்டி இருக்கலாம். ரகுமான் வந்து" ஹேலோ டிமிதிரி  " னு ரெண்டே ரெண்டு டயலாக் பேசிட்டு போய்டுறார் . என்ன ரோல் ?  இண்டர்போல்ல என்ன பண்ணுறார் ... இப்படி செம  கேள்வி பாக்கி இருக்கு.

டிமிதிரி சரக்க  இந்தியாக்கு கடத்தி வந்து நல்ல பேர சம்பாதிக்கிறார்  அஜித் . எப்படி கடத்தி வந்தாருனு அந்த டைரக்ட்டருக்கே தெரியாதுன்னு நினைக்குறேன்.  அப்புறம் ஸ்னை ஃபர்  ஆளுங்க அஜீத் வர கார பார்த்ததும் சுடுறதுக்கு பதுங்குறாங்கலாம் ... ! ஸ்னை ஃபர்  ஆளுங்களுக்கு மொத பாடமே  எதிரிக்கு தெரியாம மணி கணக்குல பதுங்கி இருந்து போட்டு தள்ளுறது தான் .

டிமிதிரி ஃபேக்டரில பூந்து கண்  ஃபைட்  நடக்குது ( பயங்கிரமான ஒரு ரஷியா தாதாவோட கோட்டைக்குள்ள எப்படி அவ்ளோ ஈஸியா பூந்தாங்கனு தான் தெரியல ) ஒரு குண்டு கூட படல . இந்த லச்சணத்ல கிரேன் மேல எல்லோரும் பார்க்கிற மாதிரி  நின்னுட்டு சுடுறாராம் . நம்ம ஆளுங்களுக்கு இன்னும் கன் ஃபைட் ஒழுங்கா எடுக்க தெரியல . அஜீத் ஃபேக்டரில  கண் ஃபைட்  பண்ணிட்டு தான் இருந்தார் . எப்போ  டிமிதிரியோட  டிரைன்ல பாம் வச்சார்னு  டைரக்டர் அடுத்த ( பீலா -3) படத்துல சொல்லுவார் போல ... ! . சும்மா அஜித் நடந்து வரதுலயும் , மீசிக்லயும்  திரில்லர்ல காட்டிடலாம்  அதே இந்த கூறு கெட்ட சனங்களுக்கு அதிகம்னு டைரக்டர்  நினைச்சுட்டார்  போல
 ( கோவம் வராதுங்களா  பின்ன ... இங்க புனேல ஒரு டிக்கெட் விலை  280 ரூபாய் ... சும்மா இல்ல ...280 குடுத்துட்டு இப்படி ஒரு மொக்கைய பார்த்தா ...) 

எல்லாத்தையும் விட படத்துல ஒரு பெரிய லாஜீக் ஓட்டை  " அஜித், அந்த ஹெலிகாப்டர்  உள்ள  எப்படி வந்தார்  ...? " . (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ...? !!! ) கடைசி கிளைமாக்ஸ் சண்டைல , வில்லன் கூட்டம் ஹெலிகாப்டர்ல வராங்க , டிரெய்ன் முன்னாடி இறங்குறாங்க , டிரெய்ன் டிரைவர போட்டு தள்ளிட்டு ஹெலிகாப்டர்  உள்ள மறுபடியும் வந்தா ...அட நம்ம தல உள்ள ரெடியா இருக்கார் அப்புறம் என்ன வழக்கம் போல சண்டை தான்...

"தல"  ஹெலிகாப்டர் உள்ள எப்படி வந்த்தார்னு கேட்டா  உம்மச்சி கண்ண  குத்திடுமாம் ...!
கால கொடுமைடா சாமி . இப்படியே ஒரு ரெண்டு படம் அஜித் நடிச்ச போதும் ... ! அப்புறம் அஜித்னு  ஒரு நடிகர்  இருந்தாராம் ... அப்படின்கிற நெலமை ஆயிடும் . மொத்ததுள்ள பில்லா அப்பிடிகின்ற பேர எவ்ளோ  சொதப்ப முடியுமோ அவ்ளோ சொதப்பி இருக்காங்க .

Tuesday, March 20, 2012

சிட்டுக்குருவி

Courtesy: http://www.birdsofbritain.co.uk - Photo by © Christine Nichols

கிர்ச்…கிறீச்…கிர்ச் …கிர்ச் கிறீச் என்று கிரீச்சிடும் சிட்டுக்குருவிகளை இப்போது எல்லாம் நொம்ப அறிதாக தான் பார்க்க முடிகிறது. பள்ளி விடுமுறையில் (20 வருடங்களுக்கு முன் )  பாட்டி வீட்டில் இருக்கும் போது தோட்டத்தில் நெறைய சிட்டுக்குருவிகளை பார்த்திருக்கிறேன். கம்பு, சோளம் ,காய வைக்கும் போது காக்கா மற்றும் இன்ன பிற பறவைகளை முடுக்க நான் தான் காவல், இருந்தும் சிட்டுக்குருவி வந்தால் விரட்ட மாட்டேன்.
அடர்த்தியான பிரவுண் நிறமும் ,கருப்பும் கலந்து சிறுசா இருக்கும் குருவியை யாரும் எனக்கு அது பிடிக்காத பறவைனு சொல்ல மாட்டாங்க. குருவிகிட்ட ஒரு ஆச்சிரியமான விஷயம் என்னன்னா அதோட சுறு சுறுப்பு. சும்மா அதுக்கும் இதுக்கும் கிறீச்…கிர்ச்ன்னு சத்தம் போட்டுட்டு பறந்துட்டே இருக்குங்க . கொஞ்சம் அடர்த்தி கம்மியான உருவத்துல சின்னக்குருவினா அது பெண் குருவி. மூக்கோட மூக்கு வச்சு சும்மா கொஞ்சிக்குங்க. ஒரு அன்னியோன்யமான காதலர்கள் மாதிரி தான் இருக்கும் அதுகளோட கொஞ்சல்கள். கழுத்தை திருப்புவதும் கூட சட் சட்டுன்னு தான் செய்யும்.கழுத்த ஒரு பக்கமா திருப்பி நம்மள அண்ணாந்து பாக்கும் போஸ் அழகா இருக்கும்.


மண் குளியல் ...! (courtesy:http://en.wikipedia.org/wiki/House_Sparrow)
கும்பலாக கூடி மண்ணில் எதையாவது மும்மரமா பொருக்கி கொண்டு இருக்கும். இல்லைனா நல்ல நெகு நெகுன்னு இருக்கிற கொலிச்ச மண்ணில் ரெக்கைய விரிச்சு போட்டுட்டு மண் குளியல் எடுத்துட்டு இருக்கும்.  அம்மா விளக்கி கழுவ வைத்திருக்கும் தட்டில் ஒராமாக ஒதுங்கி இருக்கும் இரண்டு சொட்டு தண்ணீர் போதுமானது அதன் தாகம் தீர்க்க.

தோட்டத்தில் வாய்க்காலில் தண்ணீர் போகும் போது குளியல்கள் போடும். ஏமாற்று குளியல் .சும்மா தலையை மட்டும் தண்ணிக்குள்ள விட்டுட்டு உடனே வெளியே எடுத்துடும் . என்னமோ உடம்பு முழுக்க நனஞ்சுட்ட மாதிரி சும்மா சிலுப்பு சிலுப்புன்னு சிலுப்பிக்கும்.
ஏமாற்று குளியல் ...!(courtesy:http://housesparrow.org)


கண்ணாடிய கண்ட மாத்திரம் அதுக்கு எப்படி இருக்குமோ தெரியல , பிரேம் மேல உக்காந்துட்டு "என்னோட பேட்டைல இவன் யாருடா புதுசா "ன்னு அதோட உருவத்தையே  சும்மா சலிக்காம பொட்டு பொட்டுன்னு கொத்திக்கிட்டே இருக்கும். எங்கதான் ஒளிஞ்சுட்டு இருக்கான் இவன்னு அப்பப்போ கண்ணாடி பின் புறம் வேற எட்டி எட்டி பார்க்கும்.

“ ஏ குருவி ,சிட்டுக்குருவி …” முதல் மரியாதை படம் வந்து இருந்த நேரம். என்சோட்டு பசங்க பொண்ணுங்க எல்லாம்  குருவிய பார்த்தா அந்த பாட்டை பாடுவோம். கூடு கட்டுவதற்கு ஒரு சிறிய அடர்த்தியான செடி போதுமானது. எங்கள் தோட்டத்தில் ரெண்டு வெண்டைக்கா செடிக்கு நடுவுல கூடு கட்டி இருந்துச்சு. சின்ன கோலி குண்டு மாதிரி மூணு வெள்ளை முட்டைகள். அது குஞ்சு பொரிச்சு பறந்து போகும் வரையில் செடியை புடுங்க வில்லை.  ஒரு முட்டையை ஆர்வ கோளாறில் கையில் எடுத்து பார்த்துவிட்டேன் ,அதனால் தான் என்னமோ இரண்டு குஞ்சுகள் மட்டும் தான் பொறித்து இருந்தது.
தானியங்கள் , புழு , பூச்சி இது தான் உணவு. சின்ன வெட்டுக்கிளி கிடச்சா போதும்  அவ்ளோவு தான்  விடவே விடாது . அது எங்க எல்லாம் ஜம்ப் பண்ணி போகுதோ அங்க எல்லாம் சட் சட்னு கூடவே பறந்து போய் பிடிக்காம விடாது . கம்பு ,சோளக்கதிரின் மேலேயே உக்காந்துட்டு என்னமோ தனக்காகவே பயிரிட்டு வச்சு இருக்காங்ககிற மாதிரி உரிமையோட கொத்தி கொத்தி சாப்பிடும் .
குருவிகள் அழுகல்களை, அசிங்கங்களை சாப்பிட்டு நான் பார்த்ததில்லை . பாத்திரம் கழுவும் இடத்தில் அத்தனை சோத்து பருக்கைகள் இருந்தாலும் ஒன்றை கூட வாயில் வைக்காதுகள். அதே சமயம் ஒரு பிடி அரிசியை தூவினால் நொம்ப சந்தோசமாக உற்சாகமாக  பயந்து பயந்து பொறுக்கும். பின்னர் பயம் விலகி காலுக்கு பக்கத்துல வந்து அரிசி பொறுக்கும் . அதை பார்க்கையில் மனசு திருப்பதி படும்.
இருபது வருடத்துக்கு அப்புறம் இப்போ தோட்டத்தில் ஒரு இடத்தில கூட குருவியை பார்க்க முடிவது இல்லை. நான் இருக்கும் கிராமத்திலேயே இந்த நிலைமை. மைனாக்களும் ,காக்கைகளும் அதிகரித்து உள்ளன. கிராமத்தில் கூட சோளம் ,கம்பு ,சாமை மாதிரியான தானிய பயிர்கள் பயிரிடப்படுவது இல்லை. பூச்சி புழுவும் வராத படிக்கு ஏகப்பட்ட பூச்சி மருந்து அடிச்சு குறிவிகளோட வாழ்வாதாரத்தை கெடுத்து விட்டோம்.
சாப்பிட உணவு தட்டுபாடு , காக்கா ,மைனா மாதிரியான முரட்டு தனமான பறவைகளுக்கு மத்தியில் செல் போன் டவர் ரேடியேசன் , இப்படி கால ஓட்டத்தில் அந்த சின்ன சிட்டு குருவிகளோட கிறீச் …கிர்ச் சத்தம் நம்ம காதுகளுக்கு கேக்காமயே போயிருச்சு . சிட்டு குருவி லேக்கியதினால் அதற்க்கு ஆபத்து வந்து இருக்காது என்று நம்புகிறேன். கண்ணு முன்னாடி ஒரு அருமையான பறவை இனம் அழிந்து கொண்டு வருது. நாளைக்கு என் பையன் வளர்ந்து “அப்பா சிட்டு குருவி எப்படி இருக்கும்னு ?"  தான் கேப்பான். இப்படி தான் இருந்துச்சுனு குருவி போட்டோவ தான் காட்டனும்.
பால்கனியில்லோ இல்ல வீட்டின் பின் புறமோ ஒரு சின்ன கிளாசுல தண்ணி ,கொஞ்சம் அரிசி இல்ல ஏதாவது தானியம் வச்சிருந்தா ஒரு வேளை அதுகளை காப்பாத்தி இருக்கலாமோ …?

டிஸ்கி : இன்று ( 20 மார்ச் 2012 ) உலக குருவிகள் தினம்.
உங்க இடத்துல இருக்கிற சிட்டு குருவிகளை பத்தின தகவல்களை இங்க பகிர்ந்துக்குங்க . பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகமும் இணைந்து அழிந்து வரும் இந்த இனத்தை காப்பாத்த முயற்சிகளை செய்கிறார்கள். உங்களின் 5 நிமிட பங்களிப்பு மிகவும் உதவும் .

Sunday, February 26, 2012

உம்மாச்சி கண்ண குத்திடுமாம்...!

மன்னிக்கணும் . பிப்பரவரி மாசத்துல எந்த பதிவும் போடாம இருக்கனுமாம் . இல்லேனா உம்மாச்சி கண்ண குத்திடுமாம் . எதுக்கு பொல்லாப்புன்னு டப்பாவ ஓரம் கட்டி வச்சு இருக்கேன். அடுத்த மாசம் வந்துருவோம் இல்ல ...! ( இந்த பொழப்புக்கு நீ நாக்குல தூக்கு போட்டுட்டு சாகலாம்ன்னு நீங்க மனசுல நெனைக்குறது எனக்கு சத்தியமா கேக்குல சாமியோ ....! )

Tuesday, January 31, 2012

அண்ணா ஹாசரேயும் வொய் திஸ் கொலவெறியும் - ஒரு ஒப்பீடு

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்பது உண்டு. ஒன்றுக்கு ஒன்று தொடர்பு அற்ற நிகழ்வுகளை வேறுபடுத்தி காட்ட இப்படி சொல்வது வழக்கம் . ஆனால் எந்த ஒரு நிகழ்வுகளையும்வேறு எந்த ஒரு நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்த முடியும்.  அப்துல் காதர் அமாவாசை அன்று பிறந்து இருக்கலாம். !

ஒரு வண்ணத்து பூச்சியின் இறகு அசைவில் உலகின் மறு கோடியில் உருவாகும் ஒரு புயல் காற்றினை தொடர்பு படுத்தலாம் . எங்கோ அசைந்த ஒரு வண்ணத்து பூச்சியின் சிறகு அசைவு தான் இந்த தானே புயலும் . கேயாஸ் தியரி படி இது சாத்தியமே .

வொய்  திஸ் கொலவெறியும், அண்ணா ஹாசரேயும்  ஒன்றால் விளைந்த மற்றொரு நிகழ்வு அல்ல என்றாலும் இரண்டுக்கும் ஒரு பொதுவான ஒப்பீடு உள்ளது . அது என்னான்னு இங்க பார்க்கலாம் .

1. இருவருமே மிக குறைந்த காலத்தில் மிக பிரபலாமாக பேசப்பட்டவர்கள் . இரண்டுமே திடீரென்று தோன்றியவர்கள் . ஒபாமா வரை அண்ணா ஹசாரே பிரபலம் . எகிப்தில் ஒரு சாதாரண பப் பாரில் வொய் திஸ் கொலவெறி பாடப்படுகிறது. இன்றைய அளவில் ஜன் லோக் பால் தான் டாக் ஆப் தி இந்தியா . கொலவெறி பாடலும் இது வரை 21 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இதன் மராத்தி வெர்சனை கேட்டு உள்ளேன். பாகிஸ்தானிலும் " டொமாக்கராசி ஜி " னு ரீமேக் செய்து உள்ளார்கள் .

2. ஹசாரே இந்திய அரசியல் அமைப்பு , அதன் செயல்பாடுகள் , மத்திய ,மாநில, பொது பட்டியல் விவகாரங்கள் , இதை பாதிக்கும் அம்சங்கள் என நிறைய விஷயங்களை அறியாதவர்.   கிரண் பேடி கும்பலால் ஆட்டுவிக்கப்படும் ஒரு பொம்மை தான்அண்ணா ஹசாரே. மக்கள் ஊழலில் நொந்து போய்  இருக்கும் நேரத்தில் அதற்க்கு எதிராக குரல் கொடுத்ததால், மீடியாக்கள் ரொம்ப அதிகமாய் முக்கியத்துவம் கொடுத்ததினால் பிரபலம் ஆனவர் . ஊழலுக்கு எதிரான ஒரு சட்டம் அது ஜன் லோக் பால் . இப்படி பட்ட எளிமையான ஒரு எண்ணாதினால் தான் ஜன் லோக் பால் மக்களிடையே பிரபலம் ஆக காரணம் . இதன் ஆதாரண கட்டமைப்பு ,செயல்பாடுகள் பற்றி ஒருவருக்கும் தெரியாது அல்லது தெரிந்து கொள்ள விரும்பவும் வில்லை. 

3. கொலவெறி பாடலின் பிரபலமும் இப்படி பட்ட ஒரு காரணம் தான். இதை விட மிக மிக அழகான மெட்டுக்களுடன் , இசைக் கோர்வைகளுடனும் கொண்ட எண்ணற்ற பாடல்கள் இருந்தாலும் இவ்வளவு பிரபலம் ஆக காரணம் அதன் எளிமை . ஒரு பாடலுக்கே உண்டான எந்த விதமான இலக்கண கட்டுபாட்டுக்குள்ளும்  அடங்காமல் ஏதோ பேசுவது போல அமைக்கப்பட்ட அதன் நடையமைப்பு . மானே ,தேனே , மன்மதனே என்று ஜல்லி அடிக்காமல் மிக சாதாரணமான வார்த்தைகளை கொண்டதும் அதன் பிரபலத்திக்கு ஒரு காரணம் .சும்மா இருக்கும் நேரத்தில் முணுமுணுக்க , ராகம் தாளம் என்று இலக்கண கட்டு படுத்தாத ஒரு சாதாரண பாட்டு  இல்லாத நேரத்தில் கொலவெறி அதை பூர்த்தி செய்தது .


அதுவும் இல்லாமல் , YOU TUBE , மூஞ்சி புத்தகம் (FACE BOOK ) போன்ற ஒரு சோசியல் வலைத்தளங்களில் இதன் பரவல் அசாதியமானது தான். ஒரு CD யின் மூலமோ அல்லது டி‌வியின் மூலமோ இப்பாடல் பிரபலம் ஆகுமா என்றால் சந்தேகமே . YOU TUBE , மூஞ்சி புத்தகம் போன்ற சோசியல் வலை தளங்களில் மிக சாதாரணமான விஷயம் உலகம் முழுவதும் பரவ முடியும் .அந்த வலைதளங்கள் செயல்படும் விதம் அப்படி.

வரலாற்றில் இப்படி திடீரென்று பிரபலம் ஆனவைகள் நாளடைவில் காணாமல் போன கதைகள் ஏராளம் . அண்ணா ஹாசரேயும் , கொலவெறியும் அந்த  லிஸ்டில் கண்டிப்பாக சேரும்.









ஸ்ஸூகூல்...!

கடந்த ஒரு மாதமாக டப்பாவ தொடவே முடியாம போய்ருச்சு . அதனால நொம்ப லேட்டா சொல்லுறேன் " அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" . அது என்னனா , தங்கமணிக்கு லீவ் (ஒரு வருஷம்) முடிஞ்சு போச்சு. ஜனவரி ரெண்டாம் தேதியில் இருந்து ஆபீஸ் போறாங்க. ஒரு மாசமா தமிழ் நாட்டுல லீவ என்சாய் பண்ணுணதுல கட பக்கம் வர முடியல . அதனால ப்ளாகர் உலகம்  ஒண்ணும் குடி முழுகி போகாதுன்னு எனக்கு தெரியும், இருந்தாலும் ஒரு பில்ட் அப் வேணாமா ?
ஹரீஷ்
ஹரீஷ் 
டிசம்பர் மாசம் முழுசா சசிகலா , தானே புயல் , கொல வெறி,முல்லை பெரியாறு ..! இது தான் ஹாட் ஆப் த டாபிக் . ஒரு சில பத்திரிகைகள் தான் இதை தவிர்த்து மற்ற விசயங்களையும் போட்டாங்க.
சிங்கத்தோட( எ(ங்களோட)ன்னோட)  குட்டிய( பையன்) கொண்டு போய் ஸ்ஸூகூல்ல போட்டாச்சு . மொத நாள் நான் கூட இருந்தகாட்டி அழுகாம இருந்துட்டான் . ரெண்டாம் நாள் கத்தி ஆற்பாட்டம் பண்ணி ஒரே ரகளை ஆகி போச்சு . வேற வழி இல்லாம விட்டுட்டு வரும் போது ஜன்னல் கம்பியை பிடிச்சுட்டு ரோட்டுல போற யாரையோ பாத்துட்டு 'அப்பா வாப்பா ..வாப்பானு' கூப்பிடும் போது இந்த சிங்கதுக்கே கண்ணுல தண்ணி வந்துருச்சு . தங்கமணி நைஸ்ஸா 'நீங்களே கொண்டு போய் விட்டுடுங்கனு' எஸ்கேப். மூணாவது நாள் சேரை கிரில் கதவுக்கு பக்கத்தில் போட்டு உக்காந்துட்டு அழுகை. ஒரு வாரம் ஆச்சு அழுகையை நிறுத்த. இப்ப கூட அப்பப்போ அழுகிறானாம்.  
அந்த ஸ்ஸூகூல்ல ஒன்றரை வயசு முதல் குழந்தைகள் உள்ளார்கள்.  இவன் ஏன் இப்படி கத்தி ஆற்பாட்டம் பண்ணுறான் என்று அவர்களுக்கு எல்லாம் ஆச்சரியம் . ஒரு பெண் குழந்தை 'அங்கிள் ,எனக்கு நெத்தி சுட்டியே இல்லை ..! அம்மாவ வாங்கி தர சொல்லுங்க ' என்றது. இன்னொரு குழந்தை இவன் முன்னாள் நாட்டியம் ஆடி சிரிக்க வைக்க முயன்றது . மற்றொன்று ஒரு பந்தை கொண்டு வந்து தந்தது . ஒரு வினாடி அழுகையை நிப்பாட்டி, பந்தை கையில் வாங்கி வைத்து கொண்டு மீண்டும் அழுக ஆரம்பித்தான், மற்றொரு குழந்தை விளையாடி கொண்டு இருந்த கார் பொம்மையும் வேண்டும்மென்று . அந்த குழந்தைகளும் ஆரம்பதில் இவனை போல் தான்  அழுதார்களாம்.
ஒரு வார காலம் அவன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தோம் . தினமும் காலையில் ஸ்ஸூகூல் போகிறேன் என்று அவன் அனுபவிக்கும் துன்பத்தை இப்படி ஈடு செய்வோம் என்று ஒரு விதமான மன ஆறுதல். இருந்தாலும் கையுக்கும் காலுக்கும் நடுவே ஓடி ஆடி கொண்டு கூடவே இருந்த குழந்தை திடீரென்று ஆறு மணி நேரம் பிரிந்து போனது ஒரு விதமான வேதனை தான்.
புனேக்கு திரும்பி வரும்போது கேட்டேன் " ஹரீஷ் உன் ஃப்ரெண்ட்டோடா பேர் என்ன ?" "ப்ரீஷ்" என்றான் ( ப்ரீனித்தா ..!). வரம் பெற்றவர்கள் குழந்தைகள்.
Blogger Widgets