Pages

Tuesday, March 20, 2012

சிட்டுக்குருவி

Courtesy: http://www.birdsofbritain.co.uk - Photo by © Christine Nichols

கிர்ச்…கிறீச்…கிர்ச் …கிர்ச் கிறீச் என்று கிரீச்சிடும் சிட்டுக்குருவிகளை இப்போது எல்லாம் நொம்ப அறிதாக தான் பார்க்க முடிகிறது. பள்ளி விடுமுறையில் (20 வருடங்களுக்கு முன் )  பாட்டி வீட்டில் இருக்கும் போது தோட்டத்தில் நெறைய சிட்டுக்குருவிகளை பார்த்திருக்கிறேன். கம்பு, சோளம் ,காய வைக்கும் போது காக்கா மற்றும் இன்ன பிற பறவைகளை முடுக்க நான் தான் காவல், இருந்தும் சிட்டுக்குருவி வந்தால் விரட்ட மாட்டேன்.
அடர்த்தியான பிரவுண் நிறமும் ,கருப்பும் கலந்து சிறுசா இருக்கும் குருவியை யாரும் எனக்கு அது பிடிக்காத பறவைனு சொல்ல மாட்டாங்க. குருவிகிட்ட ஒரு ஆச்சிரியமான விஷயம் என்னன்னா அதோட சுறு சுறுப்பு. சும்மா அதுக்கும் இதுக்கும் கிறீச்…கிர்ச்ன்னு சத்தம் போட்டுட்டு பறந்துட்டே இருக்குங்க . கொஞ்சம் அடர்த்தி கம்மியான உருவத்துல சின்னக்குருவினா அது பெண் குருவி. மூக்கோட மூக்கு வச்சு சும்மா கொஞ்சிக்குங்க. ஒரு அன்னியோன்யமான காதலர்கள் மாதிரி தான் இருக்கும் அதுகளோட கொஞ்சல்கள். கழுத்தை திருப்புவதும் கூட சட் சட்டுன்னு தான் செய்யும்.கழுத்த ஒரு பக்கமா திருப்பி நம்மள அண்ணாந்து பாக்கும் போஸ் அழகா இருக்கும்.


மண் குளியல் ...! (courtesy:http://en.wikipedia.org/wiki/House_Sparrow)
கும்பலாக கூடி மண்ணில் எதையாவது மும்மரமா பொருக்கி கொண்டு இருக்கும். இல்லைனா நல்ல நெகு நெகுன்னு இருக்கிற கொலிச்ச மண்ணில் ரெக்கைய விரிச்சு போட்டுட்டு மண் குளியல் எடுத்துட்டு இருக்கும்.  அம்மா விளக்கி கழுவ வைத்திருக்கும் தட்டில் ஒராமாக ஒதுங்கி இருக்கும் இரண்டு சொட்டு தண்ணீர் போதுமானது அதன் தாகம் தீர்க்க.

தோட்டத்தில் வாய்க்காலில் தண்ணீர் போகும் போது குளியல்கள் போடும். ஏமாற்று குளியல் .சும்மா தலையை மட்டும் தண்ணிக்குள்ள விட்டுட்டு உடனே வெளியே எடுத்துடும் . என்னமோ உடம்பு முழுக்க நனஞ்சுட்ட மாதிரி சும்மா சிலுப்பு சிலுப்புன்னு சிலுப்பிக்கும்.
ஏமாற்று குளியல் ...!(courtesy:http://housesparrow.org)


கண்ணாடிய கண்ட மாத்திரம் அதுக்கு எப்படி இருக்குமோ தெரியல , பிரேம் மேல உக்காந்துட்டு "என்னோட பேட்டைல இவன் யாருடா புதுசா "ன்னு அதோட உருவத்தையே  சும்மா சலிக்காம பொட்டு பொட்டுன்னு கொத்திக்கிட்டே இருக்கும். எங்கதான் ஒளிஞ்சுட்டு இருக்கான் இவன்னு அப்பப்போ கண்ணாடி பின் புறம் வேற எட்டி எட்டி பார்க்கும்.

“ ஏ குருவி ,சிட்டுக்குருவி …” முதல் மரியாதை படம் வந்து இருந்த நேரம். என்சோட்டு பசங்க பொண்ணுங்க எல்லாம்  குருவிய பார்த்தா அந்த பாட்டை பாடுவோம். கூடு கட்டுவதற்கு ஒரு சிறிய அடர்த்தியான செடி போதுமானது. எங்கள் தோட்டத்தில் ரெண்டு வெண்டைக்கா செடிக்கு நடுவுல கூடு கட்டி இருந்துச்சு. சின்ன கோலி குண்டு மாதிரி மூணு வெள்ளை முட்டைகள். அது குஞ்சு பொரிச்சு பறந்து போகும் வரையில் செடியை புடுங்க வில்லை.  ஒரு முட்டையை ஆர்வ கோளாறில் கையில் எடுத்து பார்த்துவிட்டேன் ,அதனால் தான் என்னமோ இரண்டு குஞ்சுகள் மட்டும் தான் பொறித்து இருந்தது.
தானியங்கள் , புழு , பூச்சி இது தான் உணவு. சின்ன வெட்டுக்கிளி கிடச்சா போதும்  அவ்ளோவு தான்  விடவே விடாது . அது எங்க எல்லாம் ஜம்ப் பண்ணி போகுதோ அங்க எல்லாம் சட் சட்னு கூடவே பறந்து போய் பிடிக்காம விடாது . கம்பு ,சோளக்கதிரின் மேலேயே உக்காந்துட்டு என்னமோ தனக்காகவே பயிரிட்டு வச்சு இருக்காங்ககிற மாதிரி உரிமையோட கொத்தி கொத்தி சாப்பிடும் .
குருவிகள் அழுகல்களை, அசிங்கங்களை சாப்பிட்டு நான் பார்த்ததில்லை . பாத்திரம் கழுவும் இடத்தில் அத்தனை சோத்து பருக்கைகள் இருந்தாலும் ஒன்றை கூட வாயில் வைக்காதுகள். அதே சமயம் ஒரு பிடி அரிசியை தூவினால் நொம்ப சந்தோசமாக உற்சாகமாக  பயந்து பயந்து பொறுக்கும். பின்னர் பயம் விலகி காலுக்கு பக்கத்துல வந்து அரிசி பொறுக்கும் . அதை பார்க்கையில் மனசு திருப்பதி படும்.
இருபது வருடத்துக்கு அப்புறம் இப்போ தோட்டத்தில் ஒரு இடத்தில கூட குருவியை பார்க்க முடிவது இல்லை. நான் இருக்கும் கிராமத்திலேயே இந்த நிலைமை. மைனாக்களும் ,காக்கைகளும் அதிகரித்து உள்ளன. கிராமத்தில் கூட சோளம் ,கம்பு ,சாமை மாதிரியான தானிய பயிர்கள் பயிரிடப்படுவது இல்லை. பூச்சி புழுவும் வராத படிக்கு ஏகப்பட்ட பூச்சி மருந்து அடிச்சு குறிவிகளோட வாழ்வாதாரத்தை கெடுத்து விட்டோம்.
சாப்பிட உணவு தட்டுபாடு , காக்கா ,மைனா மாதிரியான முரட்டு தனமான பறவைகளுக்கு மத்தியில் செல் போன் டவர் ரேடியேசன் , இப்படி கால ஓட்டத்தில் அந்த சின்ன சிட்டு குருவிகளோட கிறீச் …கிர்ச் சத்தம் நம்ம காதுகளுக்கு கேக்காமயே போயிருச்சு . சிட்டு குருவி லேக்கியதினால் அதற்க்கு ஆபத்து வந்து இருக்காது என்று நம்புகிறேன். கண்ணு முன்னாடி ஒரு அருமையான பறவை இனம் அழிந்து கொண்டு வருது. நாளைக்கு என் பையன் வளர்ந்து “அப்பா சிட்டு குருவி எப்படி இருக்கும்னு ?"  தான் கேப்பான். இப்படி தான் இருந்துச்சுனு குருவி போட்டோவ தான் காட்டனும்.
பால்கனியில்லோ இல்ல வீட்டின் பின் புறமோ ஒரு சின்ன கிளாசுல தண்ணி ,கொஞ்சம் அரிசி இல்ல ஏதாவது தானியம் வச்சிருந்தா ஒரு வேளை அதுகளை காப்பாத்தி இருக்கலாமோ …?

டிஸ்கி : இன்று ( 20 மார்ச் 2012 ) உலக குருவிகள் தினம்.
உங்க இடத்துல இருக்கிற சிட்டு குருவிகளை பத்தின தகவல்களை இங்க பகிர்ந்துக்குங்க . பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகமும் இணைந்து அழிந்து வரும் இந்த இனத்தை காப்பாத்த முயற்சிகளை செய்கிறார்கள். உங்களின் 5 நிமிட பங்களிப்பு மிகவும் உதவும் .

1 comment:

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets