Pages

Friday, January 14, 2011

முரண்பாடுகள்

தங்கமணியிடம் நான் படித்த புத்தகத்தை பற்றி கொஞ்சம் விவரித்தேன். ஆனால் தங்கமணியோ எந்த வித ஆர்வமும் இல்லாமல் தலையை மட்டும் ஆட்டியது. அவரை சொல்லி குற்றம் இல்லை. அவர் ஆனந்த விகடன் ,குமுதம் போன்ற பத்திரிக்கைகலையே மேலோட்டமாக மட்டும் பார்ப்பார். இதுல நான் எஸ் .ராமகிருஷ்ணன் சிறு கதையை பற்றி விவரித்தால் அவருக்கு என்ன புரியும்.என்னுடைய ரசனையும் அவருடையதும் வேறு வேறு. எனவே முரண்பாடுகள் ஏற்படுகிறது.

பொதுவாக , மெல்ல திரும்பி பார்க்கும் போது என்னுடைய வாசிப்பின் படி நிலைகள் என் வயதுக்கு ஏற்ப மாறி கொண்டே வருகின்றது. ஆரம்ப காலத்தில் என்னக்கு கதை படிப்பது என்பது பாட புத்தகங்களில் இருந்து தான் ஆரம்பம் ஆகியது. துணை பாட நூலை நான் புத்தகம் வாங்கிய உடன் படித்து பார்ப்பேன். அதில் தான் கதைகளும் கட்டுரைகளும் இருக்கும். அடுத்து படிக்கும் புத்தகம் வரலாறு . யார் ,எந்த மன்னர் எந்த நாட்டில் படை எடுத்து எப்படி ஆட்சி செய்தார் என்று ஆராய்வேன்.பாட புத்தகங்களில் என்னை துணை பாட நூலை தவிர்த்து ரொம்ப ஆர்வத்தை ஏற்படுத்தியது அறிவியல். அதில் கூறப்பட்டு இருக்கும் "செய்து பார் " செயலை என்னால் முடிந்த அளவு செய்து, அப்படி தான் நடக்கிறதா என்று உறுதி படுத்தி கொள்ளவேன். என் கேள்விக்கு அறிவியல் வாத்தியார் பதில் சொல்ல முடியாமல் " மூடிட்டு உக்காருடா, வந்துட்டான் ....மனசுல பெரிய நியூட்டன்னு நினைப்பு..." கத்துவார்.பொட்டலம் கட்டியுள்ள நியூஸ் பேப்பரில் கூட என்ன உள்ளது என்று படிப்பேன்.

அப்பா முதன் முறையாக காமிக்ஸ் (படக்கதையை) வாங்கி கொடுத்தார். நான் அன்று அடைந்த பரவசம் இன்னும் நினைவில் உள்ளது. அதற்க்கு முன்பு வரை "அம்புலிமாமா, கோகுலம் "என்ற புத்தகங்களை படித்து கொண்டுருந்தேன் . அதில் அவ்வளாவாக படக்கதை இருக்காது. " ராணி காமிக்ஸ் " படக்கதையை அடுத்த முறை பதிப்பு வரும் வரை படிப்பேன். அம்மா ராணி நாவல் வாங்கும் போது இதையும் வாங்கி வருவார்கள். நாவலில் கடைசி பக்கத்தில் இருக்கும் அறிவு திறன் போட்டியில் கலந்து கொண்டு அனுப்பி வைப்பேன். ஆனால் ஒரு முறை கூட எனக்கு பரிசு கிடைத்தது இல்லை. கேள்வி என்னவோ ரொம்ப எளிமையாக தான் இருக்கும். "இங்கு தண்ணீர் இருக்கும் ..............குளம்/ ஆறு " இந்த ரேஞ்சில் இருக்கும் . ஆனாலும் ஏதாவது தப்பு பன்னி இருப்பேன்.

ராணி காமிக்ஸ்க்கு அப்புறம் ,முத்து ,லயன் காமிக்ஸ் பக்கம் என் பார்வை திரும்பியது. லயன் ,முத்து காமிக்ஸ்க்கு பிறகு ராணி காமிக்ஸின் கதைகள் சற்று தரம் குறைந்ததாக பட்டது. இன்று வரை சந்தா கட்டி படித்து வருகிறேன். காமிக்ஸ் படிக்க தூண்டியவர் என் அப்பா. அதற்க்கு பிறகு இவனுக்கு எதுக்குடா இந்த பழக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டோம் என்ன நொந்து நூலாகும் அளவிற்கு என் காமிக்ஸ் பைத்தியம் இருந்தது. நான் என் தங்கைக்கு பழக்கி விட்டேன். இரும்பு கை மாயாவி, டேவிட் லாரான்ஸ், 007 , டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் ...இப்படி என் கதை ஹீரோக்கள் ரொம்ப பேர். லயன் ,முத்து காமிக்ஸ் தமிழாக்கம் ரொம்ப பிரமாதம்மாக இருக்கும்.

பின்னர் ,கூடவே வயது ஏற ஏற குங்குமம் , முத்தாரம், கல்கண்டு , ஆனந்த விகடன் ,குமுதம் ,பாக்கியா, இப்படி மாறியது. வெறும் ஜோக்குகளை மட்டும் பார்த்து கொண்டு இருந்தவன் மெதுவாக சிறு கதைகளை படிக்க ஆரம்பித்தேன். பின்னர் தொடர் கதைகளுக்கு மாறினேன். ராமகிருஷ்ண விஜயம், ஞாண பூமி போன்ற ஆன்மிக இதழ்களையும் விட்டு வைக்க வில்லை.அதில் வரும் கதைகளையும் படித்தேன். ஒரு இலக்கு இல்லாமல் படித்து கொண்டு இருந்தேன். பின்னர் ராஜேஷ் குமார் , சுபா, போன்றோர்களின் துப்பறியும் நாவலை படித்தேன். இந்த கால கட்டத்தில் கொஞ்சம் அரசியல் பத்திரிக்கைகளையும் படித்தேன் . நண்பர்களின் உதவியால் "மஞ்சள் பத்திரிக்கை "யும் படித்தேன் . பருவ காலம் என்ற புத்தகம் எங்களிடையே ரொம்ப பிரசித்தம். ஒரு கால கட்டத்தில் ஜூனியர் விகடன் ,ரிபோர்டர் ,நக்கீரன் ,இப்படி எல்லா இதழ்களையும் பிரதி தவறாமல் வாங்குவேன்.

கல்லூரி படிக்கும் போது கட்டாயமாக ஒரு ஆங்கில கதையை படித்து அதை சுருக்கமாக ஒரு நோட்டில் எழுதி தர வேண்டும் . அப்போது தான் இன்டெர்னல் மார்க் கிடைக்கும். நான் ஆரம்பத்தில் இருந்து ஊ.ஓ.து .பள்ளியில் படித்து ( ஊராச்சி ஒன்றிய துவக்க பள்ளி ),உ.ஓ.ஆ.மே.நி.பள்ளியில் ( ஊராச்சி ஒன்றிய ஆண்கள் மேல் நிலை பள்ளி ) படித்து பின்னர் உ.ஓ.உ.நி.பள்ளியில் பெண்களுடன் சேர்ந்து படிக்கும் பாக்கியத்தை பெற்றவன். abcd மட்டும் தெரிந்த என்னைய போய் ஆங்கில கதை படிக்க சொன்னால் என்ன பண்ணுறது.

இருப்பதிலேயே சின்னதாக உள்ள புத்தகங்களை தேடி எடுத்து அங்க கொஞ்சம் ,இங்க கொஞ்சம் வெட்டி அப்படியே எழுதி ஒப்பேதுவார்கள். நான் சின்சீயர் சிகாமணி . டிச்னரி வைத்து கொண்டு அர்த்தம் புரிந்து ,கதையை புரிந்து ,பின்னர் அதை ஒரு தனி தாளில், தமிழில் எழுதி அதை அப்படியே ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக இலக்கண பிழையுடன் எழுதி வைப்பேன். ஆனாலும் நல்ல மார்க் போடுவார்கள். எப்படிடா இவன் மட்டும் 10 க்கு 8 வாங்குறான் என்று நண்பர்கள் காதில் புகை வரும்.

ஒரு நாள் ஆங்கில லெக்சர் என்னை கூப்பிட்டு என் கதை சுருக்கங்களை பாராட்டி ,"நல்லா இருக்கு ,ஆனா கிராம்மர் மிஸ்டேக் இல்லாமல் பார்த்துக்கோனு" சொல்லி சில எளிய ஆங்கில கதை புத்தகங்களின் பெயரை சொல்லி அவர் அக்கௌண்டில் புத்தகங்களை எடுத்து படிக்க வகை செய்தார் .அப்போது இருந்து ஆங்கில கதை படிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டது . ஆனாலும் பெரிய பெரிய ஆங்கில நாவல்களை படிக்கும் திறமை கை வர வில்லை . காரணம் இரண்டு . 1. வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் டிச்னரியை அடிக்கடி புரட்டி பார்ப்பதில் இருந்த சலிப்பு .2. மேல் நாட்டு கலாச்சார டையலாக்குகள் புரியாததால் வந்த எரிச்சல். பின்னர் விமான படையில் வாயு மனிதனாக சேர்ந்த பிறகு வாக் இங்கிலீஷ் ,டாக் இங்கிலீஷ் ,ஸ்லீப் இங்கிலீஷ், என ஒரே இங்கிலிபீசு மயமாகி போச்சு. நண்பன் பாபு படிப்பதை போல நாமும் இங்கிலீஷ் நாவல் படிக்கணும்னு திக்கி திணறி படித்த நாவல் Frederick Forsyth, எழுதிய " The day of the Jackel " ஓர் அளவிற்கு கதை புரிந்தது. பின்னர் இதை Bruce Willis நடித்த படமாக பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது . ஒரே holliwood படமாக பார்த்ததில் நிறைய டையலாக்குகள் புரிய வந்தது.


பின்னர் Ken Follett , Robin Cook , Dan Brown , Agatha Christie , இப்படி படித்தேன் . பின்னர் முத்து செல்வம் என்ற நண்பர் மூலமாக கணையாழி , இலக்கிய இதழ் படிக்க நேர்ந்தது. முதலில் ஒன்னும் புரிய வில்லை. ஆனால் எதோ ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது.இந்த கால கட்டத்தில் சுஜாதா விகடன் மூலம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தார் . அவருடைய நடை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. தேடி தேடி அவருடைய எல்லா புத்தகங்களையும் வாங்க ஆரம்பித்தேன். அவர் ஒரு தீர்க்க தரிசி. ( ex - கருப்பு குதிரை - கிரிக்கெட் மேட்ச் பிக்ஸ்சிங் ஊழல் ).அவரை பற்றி நான் சொல்ல தகுதி அற்றவன். எல்லோருக்கும் அவரை பற்றித் தெரியும். அவர் சிபாரிசு செய்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். மெதுவாக எழுத்தாளர்களின் நடை புரிய ஆரம்பித்தது. எழுத்தாளர்களும் புரிய ஆரம்பித்தது . தற்போது ஜெயமோகன் ,ராமகிருஷ்ணன் , இப்படி தற்கால இலக்கிய எழுத்தாளர்களை படிக்க ஆரம்பித்து இருக்கேன். ராமசாமி , ஜெயகாந்தன் ,நாவல்களையும் படித்து கொண்டு உள்ளேன். குமுதம் ,ஆனந்த விகடன் எல்லாம் என் வாசிப்பில் இருந்து எப்பவோ வெளியேறி விட்டது. ஜன ரஞ்சக பத்திரிக்கையை விட்டு இப்போ தனி தனி எழுத்தாளர்களின் கதைகள் ,நாவல்கள் என என் தேடல்கள் ஆரம்பித்து உள்ளது.எழுத்து ,கதை என்பது வெறும் பொழுது போக்கு மட்டும் அல்ல அது நமது காலத்தின் பிரதிபலிப்பு, நமது இப்போதைய கலாசாரத்தின் வெளிப்பாடு என புரிய வந்தது. சில பல இடது சாரி பத்திரிக்கைகளின் மூலமாக நாட்டின் பிரச்சனைகளையும்,அதன் காரனங்களையும் அறிய முடிந்தது. இந்த விசயத்தில் எந்த டிவி நியூஸ் சேனலையும் நான் நம்ப வில்லை.


இப்படி ஒரு இலக்கு இல்லாமல் , ஒரு தேர்வு இல்லாமல் ,எல்லாத்தையும் படிப்பதால் ,பல விசயங்களை அதன் மேலோட்டமான விசயத்தையும் தாண்டி , அதன் உள் அர்த்தங்களை என்னால் பகுக்க முடிகிறது. அது சரியா, தவறா என்று ஆராய முடிகிறது . இதனால் ,பலருடன் பல விசயங்களில் என் கருது முரண்படுகிறது. சில சமயங்கில் ஏன் தான் இவர்கள் இப்படி அப்பாவியாய் இருகிறார்களோ என்று பாவமாக தோன்றும். ஒரு வேலை நாம் தான் தப்பாக அர்த்தம் கொண்டு இருக்கோமோ என்று சந்தேகம் கூட வரும். அதற்காக நான் எல்லாம் தெரிந்தவன் என்று அர்த்தம் இல்லை. எனக்கு ஒரு மண்ணும் தெரியாது என்பதில் நான் தெளிவாக இருக்கேன்.

இப்போதைய இளைஞர்கள் , பெண்கள் வாசிப்பில் அதனை கவனம் செலுத்துவது இல்லை. ரொம்ப அவசரமாக எல்லாத்தையும் எதிர் பார்கிறார்கள். குமுதம் ,ஆனந்த விகடன் கூட சிறு கதைகளை விட்டு வெளியே வந்து விட்டது. ஒரே ஒரு பக்கத்திற்குள் கதையை முடித்து விடுகிறார்கள். கல்லூரி மாணவர்கள் ஒரு sms க்குள் கதை சொல்லுகிறார்கள். ஒரே வேகம்... வேகம் ..வேகம்.. யாருக்கும் பொறுமை இல்லை. நான் ஒரு கல்லூரி பெண்ணிற்கு , சேட்டன் பகத் , Ken Follett , Robin Cook , Dan Brown நாவல்கலயும்,RK நாராயணன் மால்குடி டேஸ், அருந்ததி ராயின் " God of Small Things "," A Beautiful Mind " autobiography யும் கொடுத்தேன் . சேட்டன் பகத் மட்டும் பிடித்து இருந்தது. மற்ற நாவல்களின் கதை சுருக்கம் வேண்டுமாம். அப்போது தான் படிப்பாளாம். வழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஜன ரஞ்சக நாவலின் வழியே இலக்கிய நாவலை புகுத்தி ஒரு நல்ல வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற என் முயற்சி பலனளிக்கவில்லை . காரணம் "Conflicts of interests " . ரசனை முரண்பாடுகள்.

No comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets