Pages

Thursday, November 4, 2010

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...!

நாளைக்கு தீபாவளி  ஒவ்வொரு  தீபாவளியீன்   போதும்  நான்  என்  குடும்பத்தாரின்  அருகில்  இல்லாமல் போய் விடுகிறது.நான் டவுசர்  போட்டு  இருந்த  காலத்தில் ,(இப்பவும்  ரூம்ல  அதை  தான்  போட்டுட்டு  இதை  உள் ஈடு   செய்கிறேன் ...)தீபாவளியை  தான்   மிகவும்  மகிழ்ச்சியாய்  கொண்டாடுவேன் . வயது  ஏற  ஏற  இப்போ அந்த கொண்டாட்டங்கள்   எல்லாம்  ஒரு  நினைவாக  மட்டும்   உள்ளது  . இந்த  பெரிய   பெரிய  எழுத்தாளர்கள்  எல்லாம்  சொல்லுவங்கலே , வாழ்கையின் தொலைந்து   போனா  பக்கம் ,தொலைந்து  போனா  பக்கம்னு  அப்படி  ஆகி  போச்சு .

டவுசர்  போட்ட காலத்தில்  தீபாவளின்  ஜுரம்  ஒரு  வாரத்துக்கு   முன்னால்  இருந்தே  ஆரம்பித்து  விடும் .பத்தாததிற்கு  ரேடியோவில்  சேவல்  மார்க்  பட்டாசுகள்  ,சங்கு மார்க் பட்டாசுகள் , ஐயன்  மார்க்  பட்டாசுகள் , என  வித  விதமாக  விளம்பரம்  வேறு  போடுவார்கள் .அப்பா  எப்பாடு  பட்டாவது   தவனை முறைல்லாவது  புது  துனி  எடுத்து  கொடுத்து  விடுவார்.டைலர்  அண்ணாவிடம் , கெஞ்சி  கூத்தாடி ,விரைவாக தைத்து  தர   சொல்லி போரடி வாங்கி  வருவேன் . புது  துணியின் மொற மொறப்புடன்   ,கஞ்சி வாசனையுடன்  அதை  போடும்  போது  ஒரு  புது  விதமான  மகிழ்ச்சி ஏற்படும்.

இந்த  சமயத்தில்  தங்கை  உடனான  சண்டை  பெரிதாக  எடுத்து  கொள்ள  மாட்டேன்  .பின்ன  இன்னும்  கொஞ்ச  நாளில்  பெரிய  பெரிய  யானை  வெடி ,லட்சுமி  வெடி , டபுள்   சாட் ,ராக்கெட்  இப்படி   எல்லாம்  விட  போறவன்   பிச்கோது  தங்கச்சி  கூடவா  வீரத்தை காட்டனும் .நாஹ் ...ஹ.. அப்பிடின்னு ஒரு  சத்யராஜ் வில்ல  தனம் காட்டுவேன்  . தங்கை  ஒரு  அப்புராணி .கொள்ளு  பட்டாசே  கொஞ்சம் சத்தமா வெடிச்சா  பயந்து  போய்டும் .( இப்போ  என் மச்சான் அவளை  கண்டு  நடுங்கறத பார்க்கணும் ..)

சுமாரா   ஒரு  மாசத்திற்கு  முன்பு இருந்தே   காசு  சேகரிக்க  ஆரம்பித்து  விடுவோம்.  டெய்லி  காலண்டர்ல  தீபாவளி   தேதிய  பார்த்து  பார்த்து  ,எப்ப  வரும்  எப்ப  வரும்னு ஆவலா   இருக்கும் .தீபாவளிக்கு  நாலு  நாட்களுக்கு  முன்னாடியே , வெடிகள்  எல்லாம்  வாங்கி  வைத்து  கொள்வோம் . அப்பா  தான்  வாங்கி தருவார். தங்கைக்கு  தனி, எனக்கு  தனி. ரெண்டு  பெரும் ஸ்கூல் விட்டு  வந்தவுடன் , ஒரு  சிமெண்ட்  சாக்கில்  எங்கள்  பட்டாசை எல்லாம்  எடுத்து  போட்டு  வெயியில் காய   வைத்து  கொண்டு  காவல்  இருப்போம்.

 காலனியில் இருக்கும்  பசங்கள் வந்து என் பட்டாசுகளை பார்த்தால் பெருமையாக இருக்கும். அதே  போல  நானும் அடுத்தவர் காய போட்டு  இருக்கும்  வெடிகளை  ஒரு  நோட்டம்  பார்த்துட்டு  வருவேன் .என்னைய  கட்டிலும்  நிறைய  வெடியோ  அல்லது ,பெரிய  வெடியோ  இல்லை  வித்தியாசமா  எதாவது  இருந்த  அவ்ளோ  தான்  உடனே  அம்மாவிடம்  வந்து  ஒரே  நச்சு  பண்ணிவிடுவேன்.
"அவன் கூட அந்த வெடி வச்சு இருக்கான் அப்பா  எனக்கு மட்டும் சதி பண்ணிட்டர்னு" ஒரே பொலம்பல் போடுவேன். இவன்  தொந்தரவு  தாங்க  முடியவில்லைன்னு  எதோ  ஒன்னு  ரெண்டு  அய்டம்    கூட கிடைக்கும் . கிடைதவரை   லாபம்னு  நானும்  இருந்துக்குவேன்.

எதுத்த வீடு  ரவி  குமார்  மட்டும்  ஒன்னும்  வாங்காமல் இருப்பான்  .தினமும்  அவன்  அம்மாவிடம்  "அம்மா  அப்பாவை  பட்டாசு  வாங்கி  தர  சொல்லுமா"  னு  நச்சரித்து  கொண்டே  இருப்பான் . என்னோட  பட்டச  பொறாமையாக  பார்ப்பான்  .என்னக்கு  அவனை  பார்க்க  பாவமாக  இருக்கும் . சரி  தீபாவளி அன்றைக்கு  ஒரு  கட்டு  லட்சுமி  வெடி  கொடுதரலாம்னு இருந்தேன் . அவர் அப்பா போலீசில்  இருப்பவர் .தீபாவளிக்கு  முன்னாடி  ஒரு   சாக்கு  பை  நிறைய  வெடி  வாங்கி  வது  அந்த  காலணிலேயே  அதிக  வெடி  வைத்திருப்பவனாக  ரவிக்குமார்  ஆய்ட்டான் . என்னக்கு வயிற்றுக்குள் புஸ்வானம்  எரிந்தது .அப்பா  மேல்  கோவம்  கோவம்மாக  வந்தது  அப்பா  ஏன் போலீஸ்  ஆக  வில்லை  என்று .

இருந்தாலும் , பெரிய  பெரிய வெடிகளில்  நான்  தான்  முன்னனில்   இருப்பேன் .எதுத்த வீட்டில்   நான்கு  அக்காக்கள்  கொண்ட  ஒரு  குடும்பம்  இருந்தது . ஒரு  அக்காவிற்கு  வாய் பேச  வராது . ஆனாலும்  நான்  அவர்களுடன்  கை  ஜடையில் பேசுவேன் ,சண்டை  போடுவேன் ,விளையாடுவேன் . அவர்களை  நான்  ஒரு  போதும்  ஒரு  மாற்று  திறனாளி என்ற  கோணத்தில்  பார்த்தது  இல்லை . அதனால்  என்னவோ  அவர்களுக்கு  என்  மீது  தனி பாசம் உண்டு  .அவர்கள்  வீட்டுக்கு  வரும்  வெடிகளை  என்னக்கு  தந்து  நான்  வெடிப்பதை   வேடிக்கை  பார்த்து  சந்தோஷ  படுவார்கள் .

 தீபாவளி  அன்றைக்கு  காலை யார்  முதலில்   பட்டாசு  வெடிப்பார்கள்  என்று எங்களுக்குள்  ஒரு  போட்டியே இருக்கும்  .நான் அலாரம்  வைத்து  கொண்டு, பொறுக்காமல்  இரவு நாடு நடுவே  எழுந்திரித்து  பார்த்து  கொண்டு  தூங்குவேன்.சரியாய் ஒரு  மணிக்கு  எழுந்திரித்து  ஒரு ஆட்டம் பாம்ப்  வைத்து  விட்டு  வந்து, முதலில்  வெடி  வைத்தேன்  என்ற  வெற்றி  களிப்பில்  மறுபடியும்  தூங்குவேன். ஒரு மணி ஆனா தான் அடுத்த நாள் ஆச்சுனு எங்க காலண்டர்ல கணக்கு.

காலையில் எப்படா  இந்த  சாமி  கும்பிடும்  வைபவம்  முடியும்  எப்போ  வெடி  வைப்பதுன்னு  ஒரே  பர பரப்பா   இருக்கும் . அவசர அவசரமாக ஒரு  தாஜ்  மஹால் கட்ட பிரித்து  கொஞ்சம்  பட்டாசை  பான்ட்  பாக்கெட்டில்  போட்டுகொண்டு நண்பர்கள்  இருக்கும்  இடம்  சென்றால் , அங்கு  எவனாவது  ஒருவன்  நான்  தான் முதலில் பட்டாசு  வெடித்தேன்  என்பான் . அங்கே  ஒரு  சின்ன வாக்குவாதமே வரும் .யார்  முதல  வெடி  வைத்தோம்  என்பதற்கு  அவர்  அவர்  அப்பா  அம்மாவிடம்  சாட்சிக்கு  போவோம் .வாயில்  பலகாரத்தை  திணித்து  "போய்  ஒழுங்கா  வெடிய  வெடிங்கடா " னு  செல்லமா  திட்டு  விழும் .

ஊசி  பட்டாசை  ஊது  வத்தி  கொண்டு  வெடி  வெடிக்கும்  சின்ன  பசங்களை  ஒரு அலட்சிய    பார்வை  பார்த்துட்டு , டேய் இங்க  பாருன்னு  ஒரு  ஊசி  பட்டாசை  கையில்  கொளுத்தி  போடுவேன் . பயல்கள்   மிரண்டு  போய்விடுவார்கள் .தந்கைக்கும் ,அவளின்  தோழிகளுக்கும்  இருக்கவே  இருக்கு  கலர்  தீப்பெட்டி ,சாட்டை ,பாம்பு  மாத்திரை ,இப்படி  . அவங்க  ஏரியா  பக்கமே  போக  மாட்டோம் . ஒரு கேங்கா சேர்ந்து  கொண்டு  வீதி  வீதியாய்  சுற்றுவோம் .யார்  யார்  எப்படி  எப்படி வெடி  வைகிறார்கள்  என்று .

பின்னர் , கொள்ளு  பட்டாசு   வெடிப்போம் .ஒரு  நட்டு  அதான்  நடுவில்  இரண்டு வாசர். அந்த  வாசருக்கு நடுவில் கொள்ளு  பட்டாசை  மூன்று  நான்கை  ஒன்றாக  வைத்து , நன்றாக டைட்டாக மூடி  விட  வேண்டும் ,பின்னர்  ஒரு  பாம்ப்  போடுவது போல  தரையில்  போட்டால்  அது  எதோ  கை  எரி  குண்டு  போல  "டமால் " என வெடிக்கும்   பெண்கள்  அருகில்  இதை  செய்து  காட்டி  அவர்களை  மிரண்டு  ஓட  வைத்து  எங்கள்  வீரத்தை  பறை சாற்றுவோம். அதுவும் நாம்ப டாவு அடிக்கும் பொண்ணு முன்னாடி ஒரு பெரிய ஆட்டம் பாம்ப்யோ இல்லை ஒரு புல்லெட் வெடியோ திரிய கிள்ளாமல் அப்படியே ஸ்டைலா வச்சுட்டு உடனே ஓடி வராம, ஹ இது எல்லாம் என்னக்கு பிஸ்கோத்து ,நா யாரு இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்னு மெதுவா திரும்பி வந்து ஸீன் போட்டா தான் வீரத்துக்கு அழகு . ( ஆனா மனசுக்குள்ள ஆண்டவா,என் ஆளு முன்னாடி மானத்த வாங்கிடாத  நான் அந்த பக்கத்துக்கு போனா அப்புறம் வெடிக்கனும்னு வேண்டிட்டே திரும்பி வருவேன்...! )

பின்னர்  ஆரம்பிக்கும்,திருடன் போலீஸ் விளையாட்டு.இதில் மட்டும்  விதி  விலக்காக  பெண்களையும்  சேர்த்து  கொள்ளவோம் .ஏன்ன நிறைய  திருடன்  போலீஸ்  இருந்தால் தான் விளையாட்டு காலை கட்டும் . சுருள் கேப் வெடியை  துப்பாகியில்  போட்டு  கொண்டு ஒருவரை ஒருவர்  துரத்தி  துரத்தி  "டுமில் ""டாமல் "னு  சுட்டு  கொண்டே  இருப்போம் .

பின்னர்  கொஞ்சம்  ரெஸ்ட் . அப்போ  தான்  அம்மா  என்ன  பலகாரம்  பன்னி  இருக்கானு  மெதுவாக  சமையல் அறை பக்கம்  எட்டி  பார்ப்போம் ."வாடா, தொரைக்கு  இப்போ  தான்  பசி  எடுக்குதோ .." அப்படின்னு  திட்டிதே  பலகாரம்  மற்றும்  காலை உணவை  அம்மா  கொடுப்பாள் . பலகாரங்கள்  ஒரு  வீட்டில்  இருந்து  இன்னொரு  வீட்டுக்கு  பரி  மாற்றம்  செய்யப்படும் . நான்  ஓடி  ஓடி  "aunty ,அம்மா  இத  உங்க  கிட்ட  கொடுக்க  சொன்னங்க " னு  சொல்லி , சொல்லி எங்கள்  வீட்டு  பலகாரத்தை  கொடுப்பதில்  என்னக்கு  அப்படி  ஒரு   சந்தோசம் .

மறுபடியும்  வெடி  வெடிக்கும்  படலம் . யாரும்  கட்டுடன்  வெடி  வெடிக்க  மாட்டோம் .தீர்ந்து போய்விடும்  அதுவும்  இல்லாமல்  அதில்  ஒரு  சுவாரசியம்  இல்லை . மாட்டு  சாணியின்  மேல் , தேங்காய்  ஓட்டின்  மேல் ,கல்  சந்துக்குள் , மணலை  குவித்து  வைத்து மணலுக்குள் , என  வித  விதமாக  ஐடியா வைத்து  வெடிப்போம் .

காலனியில் நான்  தான்  பெரிய  வெடி  வைப்பேன் .லட்சுமி  வெடி , ஆட்டம் பாம்ப் ,புல்லெட் வெடி ,யானை  வெடி ,கல்வெடி ,தாஜ்மகல் ,இப்படி .பட்டாச்சு  வெடிப்பதலயும் ஒரு  முறை  உண்டு . ஒவொரு  பட்டாசின்  திரியையும்  சிறிது கிள்ளி  விட்டு  மருந்தை  எடுத்து  விட  வேண்டும் .அப்போ  தான்  சர்ருனு  பத்தாம மெதுவா  டைம்  பாம்ப்  மாதிரி  வெடிக்கும் .அந்த  தீ  கங்கு  எப்போ  சர்ருன்னு  வேகமா  பத்துதோ  அப்போ  அடி  வயற்றில்  ஒரு  பயம்  வரும்  பாருங்க  அது  தீபாவளில தான்  கிடைக்கும் . நான்  இந்த  திரிய  கிள்ளாமல்  வெடி  வைப்பதில்  கில்லாடி .( "டேய்  அருள்  திரிய  கிள்ளாமலே  வெடிப்பான்  டா ...! )அப்பப்போ ஊதுவத்தியை  ஸ்டைல்  ஆக  ஊதி  விட்டு ஸீன் போட வேணும். அப்போ தான் மதிப்பு.

அன்று  இரவு ,சங்கு  சக்கரம் , கம்பி  மத்தாப்பு ,சாட்டை , ராக்கெட் ,பரசூட்  ராக்கெட் ,புஸ்வானம் ,பென்சில்  இப்படி  மைல்டா வைத்து  அன்றைய தீபவளிய  நிறைவு  செய்வோம். ஒரு தடவை கம்பி மத்தாப்பை தூக்கி எரிந்ததுல அது ஒரு தென்னை மரத்துல போய் சொருகி கொண்டு ஒரு முழு தென்னை ஓலையை எரித்து விட்டு தான் அணைந்தது . அன்றைக்கு அப்பாவிடம் முதுகில் வாங்கிய பல்பு இன்னும் ஞாபகம் இருக்குது. அடுத்த  நாள்  கலையில்  வெடித்த  காகித  குப்பைகளுக்கு  இடையே , வெடிக்காத  பட்டாசுகளை  பொருக்கி  எடுத்து ,அதில்  இருந்து  மருந்தை  ஒரு  பேப்பர்ல   கொட்டி பத்த வைத்து  கையை  சுட்டு  கொண்ட  அனுபவம்  நிறைய .

இப்போது  தீபாவளி  எல்லாம் , காலைல டிவியில் சிறப்பு  நிகழ்ச்சியில் ஆரம்பித்து , இந்திய  தொலைக்காச்சியில் முதன் முறையாகவில் முடிகிறது . அல்லது எதாவது சினிமா  தியேட்டர்ல் ஆரம்பித்து  அங்கே  முடிகிறது . இதில்  டாஸ்மாக்கை  நான்  சேர்க்க  வில்லை . என்ன  கொடுமை  இது .

என்னக்கு  தெரிந்து  எங்கள்  உறவினர்  ஒருவர்  ( அண்ணன்  தம்பிகள்  நாலு  பேர் ..இவர்  தான்  அதிகம்  படித்தவர் . A.E யாக  உள்ளவர் )இரண்டு  மாதங்களுக்கு  முன்பே  திட்டம்  இட்டு ,சிவகாசி சென்று  பட்டாசு  வாங்கி  வந்து  விடுவார்கள் . தீபாவளி  அன்று  மொத்த குடும்பமும் சேர்ந்து  கொண்டு  ரகளையாக  வெடி  வெடிப்பார்கள் .இப்போ  அவரும்  வெடிப்பதை  குறைத்து  கொண்டார் . ஆனால்  குடும்பமாக  ஒன்றாக  கொண்டாடுவதை  விட்டு  விட  வில்லை .

பண்டிகை  நாட்களில் , குடுன்பதாருடன்  ஒன்றாக  கூடி , சொந்த  பந்த்ங்களுடம்  உறவாடி  ,மனம்  விட்டு  பேசி , கலாய்த்து,சந்தோசம்மாக சாப்பிட்டு  கொண்டாடுவது  என்பது  கொஞ்சம்  கொஞ்சமாக  அழிந்து  வருகிறது . இன்னும்  கொஞ்ச நாட்களில் பண்டிகை  என்றாலே  TV யும்  , சினிமாவும்  தான்  என்று  ஆகிவிடும்  போல  இருக்கு . பக்கத்தில் இருப்பதால் உறவுகளின் அருமை தெரிவது இல்லை. என்னை மாதிரி எல்லோரும் இருந்தும் அனாதையாக இருக்கும் ஆட்களுக்கு தான் அது புரியும். இந்த லிஸ்ட்ல வெளி நாடு சென்று சம்பாதிக்கும் நண்பர்களும் ,நண்பிகளும் அடக்கம்.

No comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets